
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர்.
இந்தக் காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்பு இருவரும் திருமண வாழ்க்கையில் பிரிந்திருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும் எனக் கூறியிருந்தனர். பின்பு ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சி ஒன்றில் சைந்தவி கலந்து கொண்டு பாடியிருந்தார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷும் - சைந்தவியும் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்தனர். பின்பு இவர்கள் மனு தாக்கல் செய்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். பின்பு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே 25 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.