ராயன் படத்திற்கு பிறகு ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதோடு அதில் நடித்தும் வருகிறார். இப்படம் தனுஷின் 52வது படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குவதோடு மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரது இசையில் கடந்த செப்டம்பரில் வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான ‘காதல் ஃபெயில்’ வெளியானது. சூப் சாங்காக அமைந்த இந்தப் பாடல் தனுஷ் எழுதி பாடியிருந்தார்.
இந்த சூழலில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து அடுத்து வெளியாகவிருக்கும் பாடல், இந்த படத்திலே எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. மிக விரைவில் அது வரும்” என தனுஷை டேக் செய்துள்ளார். எனவே விரைவில் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2025 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.