சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருக்கிறார் என்ற இந்துத்துவர்களின் விமர்சனத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் தங்களது எதிப்புகளை தெரிவித்திருந்தனர். ஆனால், அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தேசியக்குழு கூட்டத்தில், இனி திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் 8500 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகி 1.5 லட்சம் யூரோக்கள் வரை வசூலித்து, கேஜிஎஃப் 2 பட மொத்த வசூலை முன்பதிவின் மூலம் முறியடித்துள்ளது. இதனிடையே, நாக்பூரில் ஒரு திரையரங்கில் மொத்த டிக்கெட்டுகளையும் சில வினாடிகளில் ஷாருக்கான் ரசிகர் மன்றத்தினர் புக் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத்தில் இப்படத்தை திரையிடக்கூடாது என அங்குள்ள திரையரங்கின் நிர்வாகத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பாக பாதுகாப்பு வேண்டி அம்மாநில முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.