'எல்லாம் அவன் செயல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆர்.கே முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் பெற்றார். இதையடுத்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதன் பிறகு நீண்ட வருடங்களாக படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்ததால் ஒரு வேலை ஆர்.கே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே, “எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்துகொண்டேதான் இருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்த ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை.. என்னுடைய படம் எப்பொழுதும் தியேட்டர்களில் தான் வெளியாகும்.. திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான்.. ஆர்ஆர்ஆர் , கேஜிஎஃப் 2 படங்களின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்தார்.
நடிகராக இருக்கும் ஆர்.கே இடையில் பிஸ்னஸிலும் களமிறங்கியுள்ளார். கைகளில் ஒட்டாமல் நரை முடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு புதிய தீர்வாக இவர் கண்டுபிடித்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பு இவருக்கு உலகெங்கிலும் பல்வேறு விதமான அங்கீகாரத்தை பெற்றுத்தந்துள்ளது. குறிப்பாக இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான டத்தோ ஸ்ரீ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒரே இடத்தில் 1005 பேரை இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்புவை பயன்படுத்த செய்து மிகப்பெரிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.