தமிழ் சினிமாவில் அவ்வப்போது தன்னளவில் புதிய விஷயங்கள் செய்து அதை அனைவரையும் கவனிக்க வைப்பவர் அஜித். அந்த வகையில் அதுவரை எந்த மாஸ் ஹீரோவும் நடிக்கத் தயங்கும் பாத்திரமான பெண் போன்ற நளினம் கொண்ட பரதநாட்டிய கலைஞர் பாத்திரத்தில் 'வரலாறு' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதோடு அவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றுத்தந்தது. பின்னர் அஜித்தின் 50வது படமான 'மங்காத்தா'வில் தலை முடிக்கு டை அடிக்காமல் இயல்பான நரைத்த முடியுடன் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் நடித்தார். இதுவும் பெரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது. அதற்குப் பிறகு பல நடிகர்களும் தயக்கமில்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கத் தொடங்கினர். திரைக்கு வெளியேவும் அது ஒரு ஸ்டைல் ஆனது. இப்படி அவ்வப்போது வித்தியாசமான விஷயங்களை செய்து அதில் வெற்றியும் கண்டவர் அஜித்.
'விஸ்வாசம்' மெகா வெற்றிக்குப் பிறகு அஜித் நடித்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. அமிதாப், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெளியாகி பெரும் பாராட்டுகளை குவித்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார் என்ற செய்தி வந்தவுடனேயே 'பிங்க்' படத்தை பார்த்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்தப் படத்தில் அமிதாப் பச்சன் பாத்திரம் வரும் நேரம் ஏறத்தாழ அரை மணிநேரம்தான். வழக்கறிஞர் பாத்திரமான அது நீதிமன்றத்தில் வாதிடுவதும் நீதிமன்றத்துக்கு வெளியே சிறிது நேரமுமாக மிகக் குறைவான நேரம் வரும், ஆனால் அழுத்தமான பாத்திரம். நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூரிடம் அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்கவேண்டும் என்பதை தனது ஆசையாக வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரீதேவியின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆசையை நிறைவேற்றும் வண்ணம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் போனி கபூர். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் மூலம் பெரும் பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் ஹெச்.வினோத், அஜித்திற்காக ஒரு புதிய கதையுடன் காத்திருக்க, அஜித்தோ அவரை பிங்க் ரீமேக் இயக்குமாறு கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கிய வினோத், பிறகு அடுத்த படமும் அஜித்துடன் என்ற சமாதானத்தோடு இயக்கினார். 08 ஆகஸ்ட் 2019 அன்று நேர்கொண்ட பார்வை வெளியாகிறது. 'பிங்க்' படத்தில் இல்லாத சண்டைக்காட்சி மற்றும் ஒரு டூயட் பாடல் அஜித்தின் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 'நேர்கொண்ட பார்வை', ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் மசாலா படமில்லை என்பது உறுதி.
சற்று வயதான, தடுமாறும் மனநிலை கொண்ட வழக்கறிஞராக அஜித் நடித்திருக்கிறார். மாடர்ன் பெண்கள் என்பதாலேயே இளைஞர்கள் அத்துமீறி அதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக வாதிடும் பாத்திரம் அவருக்கு. இப்படி, மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது, படத்தில் கொஞ்ச நேரமே வரும் முக்கிய பாத்திரங்களில் ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அண்ணாமலை, எஜமான் வெற்றிகளுக்குப் பிறகு தனது மார்க்கெட் உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டத்தில் 'வள்ளி' படத்தில் 'வீரய்யன்' என்ற சற்று வயதான பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் நாயகி பிரியா ராமன், கிராமத்திலிருந்து நகரத்திற்கு சென்று படித்து வந்ததால் நாகரிக மோகத்தில் இருப்பவர். தனது முறைப்பையனை வெறுக்கும் அவர் நகரத்திலிருந்து தனது கிராமத்திற்கு நண்பர்களுடன் சுற்ற வந்த ஒருவரின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்படுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக இருப்பார் ரஜினி. ஏமாற்றியவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்று திரும்பும் நாயகிக்கு அவரது முறை மாமனுடன் திருமணம் செய்து வைப்பார் ரஜினி. சற்று நரைத்த தலை, குறைந்த நேரமே தோற்றம் என 'வள்ளி' படத்தில் 'வீரய்யன்' இருப்பார். பாதிக்கப்பட்ட பெண், அவருக்கு ஆதரவாக கௌரவ வேடத்தில் மிகப் பெரிய ஸ்டார் என 'வள்ளி' படத்துக்கும் 'நேர்கொண்ட பார்வை'க்கும் சில ஒற்றுமைகளும் உண்டு. 'வள்ளி' படத்தின் கதையை எழுதியது ரஜினிகாந்த் என்பது முக்கியமானது. அந்தப் படத்தில் இலவச வேட்டி சேலை வாங்க வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்து "வேல வெட்டி கேளுங்கய்யா, வேல வெட்டி இருந்தா சேல வேட்டி நாமளே வாங்கலாம்" என்று அப்போதே அரசியலும் பேசியிருப்பார்.
'நேர்கொண்ட பார்வை'யில் அஜித் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது போட்டியாளராகக் கருதப்படும் விஜய், ஒரு வழக்கறிஞராக, கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றும் கௌரவ வேடத்தில் 'சுக்ரன்' படத்தில் நடித்துள்ளார். திருமலை, கில்லி, திருப்பாச்சி என வெற்றியின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கௌரவ வேடத்தில் நடித்தார் விஜய். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. 'சுக்ரன்', விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படம். விஜய், கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது பாத்திரப் பெயரான 'சுக்ரன்' என்பதே படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது. சமூகத்தில் அதிகாரமிக்க கொடியவர்களால் பாதிக்கப்படும் ஒரு இளம் காதல் ஜோடிக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர் பாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். இந்த வகையில் இது சற்றே நேர்கொண்ட பார்வை படத்துடன் தொடர்புடையதாகிறது. இப்படி தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது ரஜினி, விஜய் இருவரும் கௌரவ வேடங்களில் நடித்துள்ளது நல்ல விஷயமென்றாலும் அந்த இரு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. விமர்சன ரீதியிலும் பெரிய பாராட்டுகளை பெறவில்லை. ஆனால், அஜித் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஒரிஜினலான 'பிங்க்' படம் வணிக ரீதியாக வெற்றிபெற்று விமர்சகர்களாலும் பாராட்டப்பெற்றது. அஜித் நடித்திருக்கும் தமிழ் வடிவமும் அந்த வெற்றியை பெற வாழ்த்துவோம்.