சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குத் தலைவர்கள், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் பலரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகை காயத்ரி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"நம் உயிரைக் காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாகடர் சைமன், டாகடர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.