சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படம் வெளியாவதற்கு முன்பு அதிகாலை காட்சியை பார்க்கவரும் ரசிகர்கள், இரவு நன்றாக தூங்கிவிட்டு திரையரங்கம் வரவேண்டும் என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. இது குறித்து நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் பேசிய கௌதம் மேனன், “எந்த அளவுக்கு பேசலாம், எவ்வளவு பேசலாம்னு தெரியல. இல்லை ஏதாவது பேசுனா தப்பாயிடுமான்னு கூட தெரியல. படத்தை பார்க்க நல்லா தூங்கிட்டு வாங்கன்னு சொன்னேன். அதை சோசியல் மீடியாவுல எடுத்து போட்டு பெருசு பண்ணி, தயாரிப்பாளர் இன்டர்வியூலையே இத கேட்டு அவரு திரும்ப, 'என்ன சார் இப்படி சொல்லிட்டீங்கன்னு' என்கிட்ட கேக்குற அளவுக்கு பெருசு பண்ணிட்டாங்க.
நான் காலையில ஒரு 5 மணிக்கு விமானத்தில் பயணம் செய்கிறேன் என்றால், எங்க அம்மா அதற்கு முந்தைய நாளே ஒழுங்கா தூங்குன்னு சொல்லுவாங்க, விமானத்திலும் தூங்கலாம்னு அவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நல்லா தூங்கிட்டு ஃப்ரஷா போக சொல்லுவாங்க, அது போலத்தான் நானும் சொன்னேன். ஆனால் அது தப்பா மாறிப்போச்சு. ஆதனால எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல" என்றார்.