Skip to main content

கார்த்திக் நரேனுக்கு கெளதம் மேனனின் நீண்ட கடிதம்!

Published on 29/03/2018 | Edited on 31/03/2018
gautham


கவுதம் மேனன் தயாரிப்பில், துருவங்கள் 16 கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நரகாசுரன். அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கவுதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் சில நாட்களாக ட்விட்டரில் மோதிக் கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக இயக்குனர் கவுதம் மேனன் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில்...."நரகாசூரன் படத்தில் கார்த்திக்கின் ஆக்கப்பூர்வமான நகர்வை பார்த்த எனக்கு, அவரது டுவிட்டர் கருத்து வருத்தத்தை அளிக்கிறது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் அவ்வாறு தவறாக ஏதும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன். எனினும் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படத்தை ரிலீஸ் செய்ய பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. நரகாசூரன் படத்தின் எந்த பணியிலும் நான் குறுக்கிடவில்லை. கதை கேட்பது, தயாரிப்பு என அனைத்து பணிகளையும் எனது குழுவே கவனித்து வந்தது. அவருக்கு தேவையானதை தயாரிப்பாளர்களும் வழங்கினர். அவர் கேட்டதின் பேரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரை ஒப்பந்தம் செய்தோம். பின்னணி இசைக்காக கார்த்திக் மெக்கடோனியா சென்றார். 

 

gautham

 

இந்த படத்திற்கு செலவு செய்யும் பணத்தை மற்ற படத்திற்காக செலவிட முடியாது. இந்த படத்தை விட துருவ நட்சத்திரம் செலவில் 7 மடங்கு அதிகமான படம். அந்த படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். நான் படக்குழுவில் இருந்து விலக வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். இங்கு சினிமாவில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் கார்த்திக் தவறான முறையில் அணுகிவிட்டார். யாராலும் படத்தின் ரிலீசை தடுக்க முடியாது. மேலும் அலமாறியில் வைப்பதற்காக நாங்கள் படம் எடுப்பதில்லை. எல்லா படங்களுக்கும் வரும் பிரச்சனை தான் நரகாசூரன் படத்திற்கும் வந்திருக்கிறது. ஒரு குழு சிறப்பாக பயணிக்கும் போது, அவர்களுக்கு சில தடங்கல்கள் வரலாம். அந்த காலம் தான் இது. நரகாசூரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் விரைவில் ரிலீசாகும். இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். எனவே கார்த்திக் அவரது அடுத்த படத்திற்கான (நாடகமேடை) பணிகளில் இருந்து பின்வாங்க வேண்டாம். ஒரு சரியான இடைவேளையில் படம் வெளியாகும். அரவிந்த்சாமிக்கும் கொடுக்க வேண்டிய தொகையை முழுவதும் செலுத்தாததால் அவர் படத்திற்கு டப்பிங் பேசவில்லை. தற்போது அந்த பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது. எனக்கும், கார்த்திக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தற்போது களையப்பட்டுவிட்டது. விரைவில் திரையில் சந்திக்கலாம். நன்றி. என்று பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்