வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், ‘பிக் பாஸ்’ வருண் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இப்படத்தில் ராக்கே கதாநாயகியாக நடிக்க கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் இசையமைத்துள்ளார். மார்ச் 1 அன்று இப்படம் வெளியாகவுள்ளதால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
அப்போது கெளதம் மேனன் பேசியதாவது, “நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு நன்றி. வருண் குழந்தை போலத்தான். 10,15 படங்களில் நடித்துள்ளதால் சொல்கிறேன். கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிடி, கதிர், கார்த்திக் என நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். உங்களோடு நானும் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்படம் என்னுடைய 19வது படம். ரொம்ப மகிழ்ச்சி. துருவ நட்சத்திரம் கண்டிப்பாக வரும். வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம், தயாரிப்பாளரும் ஹீரோவும் ஒன்று சேரும் போது கண்டிப்பாக இயக்குவேன்” என்றார். விஜய் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு, “அவர் இன்னும் நிறைய படம் நடித்தால் நல்லா இருக்கும். அவரது கடைசி படம் வாய்ப்பு கிடைத்தால் பண்ணுவேன்” என்றார். த்ரிஷா குறித்து முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி பேசியது சர்ச்சையானது குறித்த கேள்விக்கு, “பெண்களைப் பற்றி யார் பேசினாலும் தப்பு தான்” என்றார்.