Skip to main content

மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப் பதிவு

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
fir registered against doctor kantharaj

மலையாளத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில சினிமா துறையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு நடிகைகள் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மருத்துவரும் அரசியல் விமர்சகருமான காந்தராஜ், ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்த நிலையில் தமிழ் நடிகைகள் குறித்து அதில் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து சர்ச்சையானது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவர் ரோகிணி, மருத்துவர் காந்தராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தொடுத்தார்.  அந்த புகார் மனுவில், “மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை ஓட்டுமொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்று பேசியுள்ளார்.  

மறைந்த நடிகைகளை எடுத்துக்காட்டாகக் கூறி அவர்களுடைய வாழ்க்கை நடத்தை என தனக்கு சம்பந்தமில்லாத எந்தவித ஆதாரமும் இல்லாமல் காந்தராஜ் பேசியுள்ளார். இதன்மூலம் நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமராமேன், எடிட்டர், மேக்கப்மேன், டைரக்டர் என விருப்பப்படுகின்ற அனைவரிடமும் அட்ஜஸ்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து தான் நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது போல அவர் கூறியிருக்கிறார். மேடை நாகரீகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் பேசியிருக்கிறார்” உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோகிணியின் புகாரின் பேரில் மருத்துவர் காந்தராஜ் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்