சமீபத்தில் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அளவில் தயாரான பல்வேறு மொழிபடங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட்டன. இதில் திரையுலகை சேர்ந்த பல்வேறு துறையினர் விருது பெற்ற நிலையில் இந்த விருதுகளை வழக்கமாக ஜனாதிபதி அனைவருக்கும் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும் மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பு விருது வென்றவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விருது பெற உள்ள 69 பேர் திரைப்பட விழாவில் பங்கேற்க போவதில்லை என அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடித்தத்தில்...."தகுந்த நெறிமுறைகளுடன் செயல்படும் தேசிய விருது வழங்கும் விழாவைப் பற்றி உரிய முறையில் எங்களிடம் தெரிவிக்காத நிகழ்வு எங்களை ஏமாற்றியது போல உணரச் செய்துள்ளது. மேலும் தேசிய விருது வழங்கும் விழாவின் 65 வருட பாரம்பரியத்தை சில நிமிடங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதும் துருதிஷ்டவசமான செயல். மேலும் எங்கள் மனக்குறையை போக்க ஒரு பதில் கிடைக்காத சூழ்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக இந்த விழாவை கலைத்துறையினர் புறக்கணிக்கின்றோம் என கருத்தில் கொள்ள தேவையில்லை" என குறிப்பிட்டுள்ளனர். இது திரையுலகில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.