தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது...
''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.