கடந்த மாதம் வெளியான நந்தன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்தின் இயக்குநர் இரா.சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் பல்வேறு அரசியல் தலைவர்கள் படத்தை பாராட்டியது பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
நேர்காணலில் இரா.சரவணன் பேசுகையில், “இப்படம் திரையரங்கில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியைத் தரவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் எதிர்பார்ப்புக்கு மேலாக நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை வைத்து மாற்றம் ஏற்படும் என்ற போலி பிம்பத்தை கட்டமைக்காமல் திரளான மக்கள் கூட்டம் மூலம் ஒரு முடிவை உருவாக்க வேண்டும் அதுதான் எதிர்காலத்திற்கான மாற்றமாக இருக்கும் என்று திருமாவளன் அடிக்கடி முன்மொழிந்திருப்பார். அவர் சொன்னது போன்ற கதையம்சம் நந்தனில் இருப்பதால் அவரே பாராட்டியிருந்தார்.
அதே போல் அன்புமணி ராமதாஸ் இந்தப் படத்தை பாராட்டுவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் ஒருநாள் இரவு 11 மணிக்கு படம் பார்த்து பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பின்பு கம்யூனிஸ்ட் தோழர்களான பாலகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். திண்டுக்கல் லியோனி என் படத்தைப் பார்த்து வீடியோ பதிவிட்டு பாராட்டினார். ஒரு படைப்பாளியாக எனக்கு இது போன்ற தன்னிச்சையாக வரும் ஆதரவுகள் சந்தோஷமாக இருந்தது.
இப்படத்தில் சீமானைப் பற்றிய ஒரு நகைச்சுவையான காட்சி வரும் அதற்கு தணிக்கை குழுவினர் சீமானிடம் அனுமதி பெற்றால்தான் அந்த காட்சியை படத்தில் பயன்படுத்த முடியும் என்று சொல்லிவிட்டனர். பின்பு நான் சீமானிடம் அதைப்பற்றி பேசியபோது அந்த காட்சி என்னவென்று கேட்காமலேயே பயன்படுத்திக்கொள் என்றார். படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க ஆசைபட்டு அவரே மனைவியுடன் வந்து படம் பார்த்தார். அந்த நகைச்சுவை காட்சி வந்தபோது சீமானின் மனைவி என்ன பண்ணி வச்சுருக்கிங்க என்று ஜாலியாக எடுத்துக்கொண்டார். அதேபோல் சீமானும் அந்த காட்சியை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டார். சில சமயங்களில் சீமான் எனக்கு கால் செய்து நிறைய கதைகளைச் சொல்வார். அப்படி பேசும்போது அவர் சொன்ன கதையில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பார். இரவு 11 மணியளவில் கால் செய்தால் விடியற்காலை 3 மணி வரை பேசுவார். அந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக நிறைய கதைகளை சொல்வார். இப்படிப்பட்டவர் அரசியல் பேசிக்கொண்டிருப்பது எனக்கு ஆச்சயமாக இருக்கும். ஒருவேளை சீமான் அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால் மிகச்சிறந்த இயக்குநராக இருந்திருப்பார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் நந்தனை பாராட்டியிருந்தாலும் அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த யாரும் இந்த படத்தை பாராட்டவில்லை. அக்கட்சியினர் படத்தில் வரும் ‘ஊழல் செய்து சிறை சென்றவர்கள் நாற்காலியில் பொம்மையை உட்கார வைத்திருக்கிறார்கள்’ என்ற வசனத்தை தங்களுக்கு எதிராக இருப்பதுபோல் நினைத்துக்கொண்டார்கள். ஆனால் அனைத்து கட்சிக்கும் எதிரான வசனங்கள்தான் படத்தில் இருந்தது. எதிரானது என்று சொல்வதை காட்டிலும் பெரிய கட்சி தலைவர்கள் செய்த தவறை முன்னுதாரணமாக வைத்து தான் செய்வது சரி என்று அடிமட்டம் வரை நியாப்படுத்தி பேசுகிறார்கள். இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த வசனங்களை படத்தில் வைத்தேன்