
கௌதம் மேனன் தயாரிப்பில்உருவாகியிருக்கும் படம் 'நரகாசுரன்'. கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கௌதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் சில நாட்களாக ட்விட்டரில் மோதிக் கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக இயக்குனர் கௌதம் மேனன் ட்விட்டரில் நீண்ட கடிதத்தை வெளியிட்டார். பின்னர் அந்த அறிக்கைக்கு கார்த்திக் நரேன் மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் மீது ஒரு புகார் ஒன்றை தெரிவித்தார். இதையடுத்து இந்த தொடர் மோதலால் தமிழ் திரை உலகில் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கவுதம் மீது குற்றம்சாட்டியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கவுதம் மேனனை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், எக் தீவானா தா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதை பற்றி பதிவிட்டுருப்பதாவது...."முதலில் தங்களை ஏமாற்றியதாக அவருக்கு எதிராக புகார் அளித்தோம். பின்னர் இந்த பிரச்சனையை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்தோம். இன்னும் பலர் அவருக்கு இரையாகி வருகிறார்கள். கார்த்திக் நரேன் இந்த விவகாரத்தை தைரியமாக வெளியிட்டிருக்கிறார். அவரால் பாதிக்கப்பட்ட பலரின் பிரச்சனைகள் இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. அவரது வலையில் இருந்து மற்றவர்களை காப்பாற்ற உதவுங்கள். அவர் ஒரு தந்திரமான நரி" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த ட்விட்டின் மூலம் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், கவுதம் மேனனை மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.