ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சஷன்ஸ் தயாரிப்பில் ‘காஞ்சனா’ என்ற பெயரில் வெளியான மூன்று படங்களுமே வெற்றிவாகை சூடி, சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனால் ராகவா லாரன்ஸின் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில், ‘துர்கா’ படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை நேற்று (06.08.2021) வெளியிட்ட படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது.
ராகவா லாரன்ஸ் நீளமான தாடியுடன் வித்தியாசமாக காட்சியளிக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருந்த செகண்ட் லுக் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், 'செல்ஃபி எடுத்து பதிவேற்றிவிட்டு செகண்ட் லுக் போஸ்டர் என்கிறீர்கள்' என கலாய்க்க ஆரம்பித்தனர். இந்தப் போஸ்டர் தொடர்பாக நிறைய மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இப்படத்தின் இயக்குநர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.