
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து, படம் இந்தாண்டு மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி படத்தை வெளியிடுவது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கணித்த தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸை மீண்டும் தள்ளிவைத்து, ரம்ஜான் தினத்தையொட்டி மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது. தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவலால், இந்தியா முழுவதும் இரவு நேர ஊடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் இந்தத் திடீர் அறிவிப்புகளையடுத்து, இந்த வாரம் மற்றும் அடுத்த வாரத்தில் வெளியாகவிருந்த 'எம்.ஜி.ஆர் மகன்' உள்ளிட்ட சில படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதத்தின் மத்தியில் வெளியாகவுள்ள 'டாக்டர்' படத்தின் ரிலீஸும் கேள்விக் குறியாகியுள்ளது.
இந்த நிலையில், இயல்புநிலை திரும்பும்வரை மீண்டும் காத்திருக்க விரும்பாத தயாரிப்பு தரப்பு படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட, இரு முன்னணி ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதில், தயாரிப்பு தரப்பு கேட்ட தொகைக்குப் படத்தை வாங்கிக்கொள்ள ஒரு நிறுவனம் தயாராக இருப்பதால் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.