சத்யராஜின் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதில், “இத்தகவல் என்னுடைய மருத்துவ நண்பர்களிடமிருந்து வந்தது தான். சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வருவதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, தேவையில்லாத ஸ்கேன்ஸ், தேவையில்லாத எம்.ஆர்.ஐ, இதையெல்லாம் பண்ண வைக்கிறாங்க. ஒரு நோயாளி குணமானதுக்கு அப்புறமும் ஒரு ரெண்டு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதுக்கப்புறம் டிஸ்சார்ஜ் பண்றாங்க.
தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்ற பயம் தான் நோயாளிகளுக்கு அதிகமா இருக்கு. எங்க அமைப்பு மூலமா சில நோயாளிகளுக்கு உதவி செஞ்சாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது யதார்த்தத்தில் முடியாத ஒரு விஷயம். நோயாளிகளை வருவாய் உருவாக்கும் எந்திரமாக அணுகக்கூடாது. அவர்கள் அப்படி கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.