சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'குற்றம் குற்றமே' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் சுசீந்திரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் 'குற்றம் குற்றமே' படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
'குற்றம் குற்றமே' திரைப்படம் மர்டர் மிஸ்ட்ரி வகை திரைப்படம். லாக்டவுன் சமயத்தில் எப்படா இந்த லாக்டவுன் முடியும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் எழுதிய கதைதான் இந்தப்படம். முழுக்க முழுக்க தோட்டத்தில் நடக்கும் கதை. ஒரே லொகேஷனில் நடக்கும் படங்கள் என்னென்ன வந்திருக்கிறது என்று பார்க்கும்போது பெரும்பாலான படங்கள் சைக்கோ திரில்லராகவும், பேய் படமாகவும் இருந்தன. ஒரு சில படங்கள் இன்வெஸ்டிகேஷன் படங்களாக இருந்தன. இன்வெஸ்டிகேஷன் ஜானரில் இதுவரை நான் படம் எடுக்காததால் அந்த ஜானரை இந்த முறை கையில் எடுத்தேன். ஃபேமிலி எமோஷனல்தான் என்னுடைய பலம் என்பதால் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் மர்டர் மிஸ்ட்ரி வகை கதையை உருவாக்கினேன்.
'குற்றம் குற்றமே'தான் ஜெய்யை வைத்து நான் இயக்கிய முதல் படம். இந்தப் படத்திற்கு பிறகுதான் 'வீரபாண்டியபுரம்' படம் பண்ணோம். லாக்டவுன் முடிந்த உடனே 'குற்றம் குற்றமே' ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. மேக்கப் மேன், காஸ்ட்யூமர் இல்லாமல் என்னுடைய உதவி இயக்குநர்களை வைத்தே சிறிய அளவிலான டீமோடு படத்தை முடித்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கிளிசரின்கூட இல்லை. ஜெய் கிளிசரின் இல்லாமல் நடித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.
இந்த மாதிரி ஒரு படம் பண்ணப்போகிறோம், உங்களுக்கு ஜும்ல கதை சொல்றேன் என்று ஜெய்யிடம் சொன்னதும், சார் கதையெல்லாம் வேண்டாம். நான் உங்களோட பெரிய ரசிகர். எப்ப, எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க என்றார். அந்த அளவிற்கு என் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.
'குற்றம் குற்றமே' படத்தை பார்த்து முடிக்கும்போது புதுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். ஒரு பையன் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்துவிட்டான் என்று நாளிதழ்களில் செய்திவருகிறது. அதில், பெண்ணின் பெயரை போட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவார்கள். ஆனால், பையனின் போட்டோ போடுவார்கள். அந்தப் பையன் செய்தது தவறுதான். ஆனால், அந்தப் பையனின் அப்பா, அம்மா, அவனுடைய தங்கச்சிகள் என்ன தவறு செய்தார்கள். அந்தப் பையனின் போட்டோ போடுவதன் மூலம் இவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்களே.
பெண்ணின் புகைப்படத்தை தவிர்க்கும்போது பையனின் படத்தையும் தவிர்க்கலாமே. எப்படியும் செய்த குற்றத்திற்காக அவனுக்கு தண்டனை கிடைக்க போகிறது. அப்படி இருக்கையில் எதற்கு பையனின் படத்தை போட்டு அவர்கள் குடும்பத்தாரையும் பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும். அந்த இடத்தைவிட்டு அவர்கள் காலி செய்துவிட்டு சென்றாலும் இந்த உலகம் நம்மை இப்படி பார்க்கிறதே என்ற வலி அவர்களுக்குள் இருந்துகொண்டேதான் இருக்கும். இது பற்றி இந்தப் படம் பேசும். இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்தார்.