இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக்கும் 'கள்ளன்' படத்தை பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அமீர், ராம் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கள்ளன் படத்தில் கதாநாயகியாக நிகிதா நடித்துள்ளார். வேட்டை சமூகத்தில் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'கள்ளன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று(13.3.2022) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கரு. பழனியப்பன் கலந்துகொள்ளாத நிலையில், இயக்குநர் சந்திரா தங்கராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், "இந்தப் படம் உண்மையிலே சிறப்பாக வந்திருக்கு. அண்ணா கரு. பழனியப்பன் ரொம்ப நல்ல நடிச்சிருக்காரு. அவரை வாழ்த்தலாம்னு நினைத்தேன். ஆனா அவர் ஏன் வரலைன்னு தெரியலை. உண்மையிலேயே அவர்தான் முதல் ஆளாக இங்க இருந்திருக்கணும், ஏதேனும் முரண்பாடு இருந்தால்கூட அதனை தவிர்த்துவிட்டு இவ்விழாவிற்கு வந்திருக்கலாம். கரு. பழனியப்பன் 'கள்ளன்' படம் ஆரம்பிக்கும் போது கட்சியில் இல்லை, ஆனால் இப்போது திமுகவில் இருக்கிறார். அதற்குத்தான் சொல்கிறேன் என்னை அழைத்ததற்குப் பதிலாக திமுகவில் இருந்து ஒரு மேயரையோ அல்லது அமைச்சரையோ கூப்டிருந்திங்கன்னா அவர் முதல் ஆளாக வந்து பேசியிருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.