பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ஜோசப், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் விசித்திரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், "வில்லன் நடிகரை கதாநாயகனாக நடிக்க வைப்பதென்பது மிகவும் சிரமமான விஷயம். சுரேஷை ஒரு வில்லனாகவே உருவாக்கிவிட்டார் பாலா அண்ணன். ரொம்ப நாள் அந்த தாக்கத்திலேயே இருந்தார் சுரேஷ். பொதுவாக வில்லன் நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும்போது, காதலிக்கிற மாதிரி பார் என்று நாம் சொன்னால் கடத்திக்கொண்டு போகிற மாதிரி பார்ப்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தின் காட்சிகளை நான் பார்த்தபோது சுரேஷின் கண்களில் அன்பு தெரிந்தது. இது சுரேஷுக்கு நடிப்பு புரிய ஆரம்பித்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. அந்த நடிப்பை அவர் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பது படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" எனக் கூறினார்.