'மீண்டும் இவரா?' என்று அஜித் ரசிகர்களே சற்று ஏமாற்றத்துடன்தான் சென்ற ஆண்டு 'விஸ்வாசம்' படத்தின் தொடக்க அறிவிப்பை எதிர்கொண்டனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த ஏமாற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் அதன்பின் ட்ரைலரில் சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தி, பின்னர் 'விஸ்வாசம்' படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் கொண்டாடும் ஒரு குடும்பப் படமாகத் திகழ்ந்து, சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’யுடன் போட்டி போட்டு சமமான வெற்றியையும் பெற்றது. இரண்டு படங்களும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமா பார்க்காத வெற்றியை ரசிகர்களுக்குக் காட்டின. உண்மையில் இந்த ட்விஸ்ட் யாருமே எதிர்பாராதது என்றுதான் சொல்ல வேண்டும். அஜித் படங்களுக்கு இதுவரை கிடைக்காத அளவிற்கு பெண்கள், குழந்தைகளின் வரவேற்பு 'விஸ்வாசம்' படத்திற்கு கிடைத்தது. அந்த அளவிற்கு தந்தை மகள் பாச சென்டிமென்ட் ஒர்க்-அவுட் ஆகியது.
அஜித் படங்களுக்கு பொதுவாகவே மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் என்றாலும் முதல் நாள் திரையரங்குகளில் பெண்களை காண்பது அரிது. அந்த அளவிற்கு இளைஞர்களும் ரஃப்பான ஆண்களும்தான் அஜித் ரசிகர்களாக இருப்பார்கள் என்பது பொது நம்பிக்கை. இதற்கு முன்பு சூப்பர் ஹிட்டான அஜித் படங்கள் கூட சாதாரண குடும்பப் பெண்களை பெரிதும் கவர்ந்தது இல்லை. அந்த பிம்பத்திலிருந்து கொஞ்சமேனும் வெளிக்கொண்டு வந்தவர் சிவா என்பதே உண்மை.
சிவா, அஜித்தை இயக்கிய முதல் படமான 'வீரம்', குடும்ப சென்டிமென்ட். பாசம், காதல், அண்ணன் தம்பி பாசம் என ஒரு முழு மசாலா படமாக அமைந்து வெற்றி பெற்றது. 'வேதாளம்' படத்தில் ஆக்சன் முதன்மையாக இருந்தாலும் அதிலும் அண்ணன் - தங்கை பாசம் என்பது முக்கிய அம்சமாக இருந்தது. பெண்கள் சுதந்திரமாக இயங்க ஆண்களின் ஒத்துழைப்பு தேவை என்று அர்த்தப்படும் வகையில் 'வேதாளம்' படத்திலிருந்த வசனங்கள் வரவேற்பைப் பெற்றன. 'விவேகம்' வேறு கதை. அது தோல்வியும் கூட. இப்போது 'விஸ்வாசம்' சென்டிமென்டில் உச்சம். இப்படி அஜித்தை சிவா இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் அஜித்திற்கு குடும்பங்களின் வரவேற்பை பெற்றுத் தந்திருக்கின்றன. ஒரு இயக்குனரும் நடிகரும் தொடர்ந்து ஒன்றாகப் பணிபுரிவது என்பது படங்களின் வெற்றியைத் தாண்டி அவர்கள் இருவருக்கும் இடையிலான புரிதலையும் நட்பையும் பொறுத்தது. இப்படிப்பட்ட, புகழ்பெற்ற கூட்டணிகளாக நமக்குத் தெரிந்தவர்கள் ரஜினி - எஸ்.பி.முத்துராமன், ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி - ஷங்கர், ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா, கமல் - கேஎஸ் ரவிக்குமார், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற கூட்டணிகள். இந்த வரிசையில் அஜித் - சிவா கூட்டணியும் இருக்கிறது.
அஜித்தை வைத்து சிவாவிற்கு முன்பாகவே நான்கு படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். அவர் இயக்கிய ஒவ்வொரு அஜித் படமும் அஜித்தின் கேரியரில் முக்கியமான காலகட்டங்களில் வெளியானவை. அஜித்-சிவா போல அஜித் - சரண் கூட்டணி தொடர்ந்து படங்கள் பணிபுரியவில்லை. சரண் இயக்கிய முதல் படமான 'காதல் மன்னன்' அஜித்தை ஆக்சன் ஹீரோவுக்கான பில்டப்புகள், சாத்தியங்களுடன் காட்டிய முதல் படம். அஜித்தை காதல் மன்னனாக உருவகப்படுத்தி அதற்கு எனவே ஒரு பாடலையும் கொண்டிருந்தது அந்த படம். அந்தப் படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றன. அதில் இடம்பெற்ற 'உன்னை பார்த்த பின்பு நான்' என்ற பாடல் இன்றும் அஜித்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. அடுத்ததாக இவர்கள் இணைந்த 'அமர்க்களம்' இரண்டு விதங்களில் அஜித்திற்கு மிகவும் முக்கியமான திரைப்படம். ஒன்று, அது அஜித்தின் 25வது திரைப்படம், இரண்டு, அது அஜித் - ஷாலினி காதல் உருவாகக் காரணமாக அமைந்து அஜித்திற்கு வாழ்க்கைத் துணையைப் பெற்றுத் தந்த திரைப்படம். இந்த இரண்டு வகைகளுமே அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். மேலும் 'தீனா', 'சிட்டிசன்', 'ரெட்' என்று அதன் பின்பு உருவான அஜித் என்ற நாயகனுக்கு அடித்தளம் அமைத்துத் தந்த திரைப்படம் 'அமர்க்களம்'. அந்தப் படத்தில் அஜித்தின் உடையமைப்பும் செயினும் அப்போதைய இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டன. இப்படி வியாபார ரீதியான வெற்றியிலும் சொந்த வாழ்க்கையிலும் அஜித்திற்கு 'அமர்க்களம்' கொடுத்தது மிகப்பெரியது. அஜித் சரண் இடையிலான நட்பும் வலிமையானது.
ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அஜித்திற்காக சரண் உருவாக்கிய 'ஜெமினி' கதையைவிட 'ரெட்' கதை நன்றாக இருப்பதாக எண்ணிய அஜித் 'ஜெமினி'யை மறுத்து 'ரெட்' படத்தில் நடித்தார். 'ரெட்', இன்று காமெடி நடிகராகப் புகழ் பெற்றிருக்கும் சிங்கம்புலி இயக்கிய முதல் படம். ராம்சத்யா என்ற பெயரில் இயக்கினார். இதனால் இவர்கள் இடையிலான நட்பு விரிசலை சந்தித்தது. உண்மையில் கதையாக கேட்கும்பொழுது 'ரெட்' படத்தின் கதை சிறப்பானதாகத் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் 'ஜெமினி' ஒரு வழக்கமான ரௌடி ஹீரோ கதையாகத் தோன்றும். ஆனால் இந்த இரண்டு படங்களும் வெளிவந்தபோது ரிசல்ட் தலைகீழாக இருந்தது. 'ரெட்' தோல்வியடைந்தது. 'ஜெமினி' வெளிவந்த 2002ஆம் ஆண்டின் மெகா ஹிட் படமானது. 'ஜெமினி' படத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும் அந்த 'ஜெமினி' பாத்திரம் அஜித்திற்கு எவ்வளவு பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது. இதுபோல அஜித் மறுத்து சூப்பர் ஹிட்டான படங்கள் பல. இதுகுறித்து அஜித்திடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட பொழுது இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் தனக்கான அரிசியில் தன் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பதில் தனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்றும் கூறினார்.
இப்படி ஜெமினியில் பிளவை சந்தித்த அஜித் - சரண் நட்பு, பின்னர் இருவருக்கும் தேவையான ஒரு சமயத்தில் மீண்டும் இணைந்தது. ஆம், 'ஆஞ்சநேயா', 'ஜனா' என இரண்டு தோல்விப் படங்களுக்குப் பிறகு ஒரு வெற்றிக்காகக் காத்திருந்த அஜித்திற்கும் அஜித் ரசிகர்களுக்கும், பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஆறுதலாக அமைந்தது அஜித் - சரண் இணைந்த 'அட்டகாசம்'. 'தல' என்ற பெயர் முருகதாஸின் 'தீனா' படத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதிகம் பிரபலப்படுத்தியது 'அட்டகாசம்' தான். அதேநேரம் 'இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன' என்ற பாடலின் மூலமும் பல பஞ்ச் வசனங்கள் மூலமும் அஜித்-விஜய் ரைவல்ரியையும் வளர்த்துவிட்டார் சரண். இப்படி அஜித்திற்கான இமேஜ் உருவாக்கத்தில் முக்கிய பங்கு சரணுக்கு உண்டு.
அட்டகாசம் - வீரம்
இவர்கள் பணிபுரிந்த மூன்று படங்களுமே தோல்வியை சந்திக்கவில்லை என்பதால் இவர்கள் இணைந்த நான்காவது படமான 'அசல்'க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்தப் படம் பில்லாவில் அஜித்திற்கு அமைந்த ஸ்டைல் இமேஜை தொடர்ந்த படம். மேலும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படம், அஜித் திரைக்கதை குழுவில் இடம்பெற்றிருந்த படம், சிவாஜி கிரியேஷன்ஸ் 'சந்திரமுகி' வெற்றிக்குப் பிறகு தயாரித்த படம் என்று பல சிறப்புகளுடன் உருவானது 'அசல்'. ஆனால் இந்த அத்தனை சிறப்புகளும் படத்தை காப்பாற்றவில்லை. படம் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு சரண் இயக்கிய எந்தப் படமும் வெற்றி அடையவில்லை. கடைசியாக இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' வெளிவந்தபோது, 'அமர்க்களம்', 'ஜெமினி', 'வசூல்ராஜா' படங்களை இயக்கியவரின் படமா இது என்று ரசிகர்களை கலங்க வைத்தது. அஜித்தின் பாதையும் வேறாகிவிட்டது. 'இதயத்திருடன்', 'மோதி விளையாடு' என்று இரு பெரும் தோல்விகளை கொடுத்திருந்த சரணுடன் 'அசல்'காக அஜித் இணைந்ததே அவர்களது நட்பின் அடையாளம்தான். அதுபோல 'ஜெமினி'யில் ஏற்பட்ட காயத்தை மறந்து அஜித்திற்காக 'அட்டகாசம்' இயக்கியது சரண் அந்த நட்பிற்குக் கொடுத்த மரியாதைதான். இப்படி அஜித் - சிவா கூட்டணிக்கு முன்பாக நான்கு படங்கள் ஒன்றாக பணியாற்றியது அஜித் சரண் கூட்டணி.
இப்பொழுதும் சிவா கொடுக்கும் பேட்டிகளில் நாம் கவனிக்கலாம், அவருக்கு அஜித் என்ற நடிகரைத் தாண்டி நபரின் மீது இருக்கும் ஈர்ப்பையும் மரியாதையையும். அஜித்தை சிவா நடிகராகப் பார்த்து எடுத்த படங்கள் வெற்றி பெற்றன. 'விவேகம்' அஜித்தை நபராகப் பார்த்து அந்த உணர்வு படத்திலும் வெளிப்பட்டு தோல்வியடைந்தது. இதே போலத்தான், சரண் அஜித்தை நடிகராக மட்டும் பார்த்த 'காதல் மன்னன்', 'அமர்க்களம்' படங்கள் நல்ல வெற்றி பெற நண்பராக, மனிதராக, 'தல'யாகப் பார்க்கத் தொடங்கிய 'அட்டகாச'த்திலிருந்தே சரிவு தொடங்கியது, பின்னர் அது 'அசலி'ல் பெரிதானது. சிவா 'விஸ்வாச'த்தில் அதை சரி செய்துகொண்டது தெரிகிறது. இந்தக் கூட்டணி இன்னொரு படம் உருவாக்கி அஜித் - சரண் கூட்டணியின் 4 படங்கள் என்ற எண்ணிக்கையைத் தாண்ட வாய்ப்புள்ளது.