இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது.
இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.
பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார்.