பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளவர் மு.களஞ்சியம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசிய இயக்கங்களுடன் தீவிரமாக இயங்கி வந்த இவர், சீமானுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார். தற்போது 'முந்திரிக்காடு' என்ற படத்தை இயக்கியுள்ளார் களஞ்சியம்.
முக்கிய பாத்திரத்தில் சீமான் நடித்துள்ள இப்படத்தில் நாயகனாக புகழ் நடித்துள்ளார். புகழ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான சி.மகேந்திரனின் மகன் ஆவார். 'முந்திரிக்காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை கவிபாஸ்கர் எழுத ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். விழாவில் நல்லகண்ணு, சி.மகேந்திரன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களும் ராஜூமுருகன், சசி உள்ளிட்ட பல இயக்குனர்களும் கலந்துகொண்டனர். படத்தில் நடித்துள்ள 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய இயக்குனர் ராஜூமுருகன், சிரித்துக்கொண்டே சீமானிடம் ஒரு கோரிக்கை வைத்தார். "இந்த மேடையில அண்ணண் சீமான்கிட்ட ஒரு வேண்டுகோளா கேக்குறேன். சூப்பர் ஸ்டார், இளைய தளபதின்னு யார் யாரோ இருக்காங்க. நீங்க, நம்ம புள்ளைக்கு ஒரு பட்டத்தை வச்சு விடுங்க" என்று படத்தின் நடிகர் புகழை குறித்து ராஜூமுருகன் கூற அரங்கம் கலகலப்பானது. பின்னர் பேசிய சீமான், "தம்பி ராஜூமுருகன் சொன்னான் புகழுக்கு ஒரு பேர் வைக்கச்சொல்லி. இன்னைக்கு புரட்சின்னா என்னனு தெரியாதவன் எல்லாம் புரட்சி நாயகன், அது இதுன்னு வச்சுக்குறான். எங்களுக்கெல்லாம் புரட்சின்னா என்னனு சொல்லிக்கொடுத்தவரோட பிள்ளை நீ. இனிமேல் நீ 'எழுச்சி நாயகன்'னு வச்சுக்க" என்று நடிகர் புகழுக்கு பட்டம் சூட்டினார்.
இதன் பின் ராஜூ முருகன் கலகலப்பாக பேசியது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய சர்ச்சையானது. ட்விட்டரில் அவர் பேசிய அந்த பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, ரஜூ முருகனை விமர்சிக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில் ராஜூ முருகன் ட்விட்டரில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். “ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன்.
ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.