வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, கெளதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வு குறித்து பேசப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜி.வி பிரகாஷ், மதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருடன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய மிஷ்கின், "என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குநர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக் கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன். மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன்தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப் படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.
தாணு சார் எனக்கு முதல் படம் முடிந்ததும் 50000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதுவரை பணத்தைத் திருப்பி கேட்கவில்லை. முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு சார் செயல்படுகிறார். ஜி.வி பிரகாஷுடன் நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும். சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னைப் பொறுத்தவரை நல்ல படம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.