மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது.
பொதுவாக ஏ.ஆர் ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணி என்றால் வைரமுத்து பாடல்கள் இடம் பெறாமல் இருக்காது. தமிழனின் பெருமைகளை தனது பாடல் வரிகளின் மூலம், உணர்ச்சிகள் குறையாமல் கொடுக்கும் வைரமுத்து ஏன் தமிழர்களின் பெருமைகளை பேசும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பாடல்கள் எழுதாதது ஏன் என ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்த கேள்வியை நிருபர் ஒருவர் அண்மையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு, "தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் இயக்குநர்கள், கலைஞர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். வைரமுத்து சிறந்த கவிஞர். நான், ஏ.ஆர் ரஹ்மான், வைரமுத்து ஆகிய மூன்று பேரும் இணைந்து நிறைய படம் பண்ணிருக்கிறோம். வைரமுத்துவின் கவிதைகளை பாடலாக மாற்றியிருக்கிறோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதையும் தாண்டி நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி என்பது மிகவும் வளமையான மொழி. அதில் சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அதனால் தான் புது புது எழுத்தாளர்கள் வருகிறார்கள். அதேபோல்தான் இதுவும். பொன்னியின் செல்வன் படத்திற்கு வைரமுத்துவை பயன்படுத்தாமல் புது ஆட்களைப் பயன்படுத்தினோம்" என்றார்.