திரைப்படங்களை எடுப்பதற்காகும் செலவை குறைக்கும் வகையில், ஹனி ப்ளிக்ஸ் என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தொடங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் பிரசாந்த், தயாரிப்பாளர் தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மணிரத்னம், "ஹனி ப்ளிக்ஸ் மென்பொருள் கட்டாயம் திரைப்படம் தயாரிப்பதற்கு எளிமையாக இருக்கும், நான் என்னுடைய அடுத்த படத்தில் கண்டிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவேன். படத்தின் செலவையும் குறைக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து சமீபகாலமாக மற்ற மொழி படங்கள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், " இது புதுசா ஒன்னும் வரல. நாம சாருலதா என்ற ஒரு தமிழ் படத்தை உருவாக்கினோம். அது மற்ற மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்றது. அதே போல்தான் தற்போது மற்ற மொழி நல்ல படங்கள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுகிறது. ஒரு படத்தை நிறைய பேர் பார்ப்பது நல்லது. ஹாலிவுட்டில் இருந்து படம் வந்தால் டப் செய்து பார்க்கிறோம். கன்னடத்தில் இருந்து வந்து பார்த்தால் என்ன தப்பு. நல்ல படம் எடுத்தால் தமிழ் படமும் மற்ற மொழிகளில் வெளியாகி வெற்றி பெரும். தமிழ் சினிமா எப்பவுமே சிறந்து விளங்குகிறது. புது புது இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க. அதனால தமிழ் சினிமாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.