சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. இதில் மகாவிஷ்ணு என்பவர் சொற்பொழிவாற்றியுள்ளார். ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது ஆன்மிகம் தொடர்பான கருத்துக்களை மாணவர்களிடம் திணித்துள்ளார். இதை கவனித்த அங்கிருந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஆன்மிகத்தை சொல்லி தரும் இடம் பள்ளி இல்லை என கண்டித்துள்ளார். இதற்கு அந்த சொற்பொழிவாளரும் பதிலளிக்கும் வகையில் ஓங்கிய குரலில் பேசியுள்ளார். பின்பு இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சில முற்போக்கு அமைப்பினரால் கண்டனத்துக்குள்ளாகி பேசுபொருளானது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என்றும் தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ. மதுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று, செய்தியாளர்கள் சந்திப்பில், “இனி இது போன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களை சந்தித்து பேச போகிறேன். இதற்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுக்கப்படும் நடவடிக்கையை பார்த்து இனிமேல் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் யாருமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப் போகிறேன். தமிழக முதல்வர் வழிமுறைகளை கொடுத்துள்ளார். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும்” என்றார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்ப பலரும் மகாவிஷ்ணுவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் லெனின் பாரதி இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையை விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டிய மாணவர்களிடம் இதுபோன்ற பிற்போக்கு சனதானவாதியை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் பணியா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டிய மாணவர்களிடம் இதுபோன்ற பிற்போக்கு சனதான தற்குறியை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் பணியா..? @CMOTamilnadu pic.twitter.com/TpTLQmoDDV— leninbharathi (@leninbharathi1) September 5, 2024