Skip to main content

சர்கார், கோமாளி பட கதை திருட்டு சர்ச்சை குறித்து இயக்குநர் கே.பாக்யராஜ் விளக்கம் 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

K Bhagyaraj

 

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நக்கீரன் ஸ்டூடியோவுடனான நேர்காணலில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அந்த நேர்காணலில், கதை திருட்டு சர்ச்சை குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"கதை திருட்டு என்று ஒருவர் வரும்போது கதை என்ன?, அந்தக் கதையை எப்போது பதிவு செய்துள்ளார், இரு கதைகளும் பொருந்துதா என்பதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கிறோம். நான் இதை திருட்டு என்று கூறி யாரிடமும் நேரடியாகக் கேட்பதில்லை. உங்களுக்கு முன்பே அவர் கதையை பதிவு செய்துள்ளார், உங்கள் கதை மாதிரியே அவரும் யோசித்துள்ளார், இனி அவரால் இந்தக் கதையை எங்கும் சொல்லமுடியாது. அதனால் நீங்கள் அவருக்கு ஏதாவது பண்ணித்தான் ஆகணும் என்றுதான் கேட்பேன். சில நேரங்களில் இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனைகள் வரும். 

 

சர்கார் பட சர்ச்சையின்போது, பெரிய நட்சத்திரம் விஜய் நடித்த படம், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பதால்தான் இரு கதைகளையும் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டியிருந்தது. காரணமில்லாமல் குற்றச்சாட்டு வைத்தோம் என்று வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் பேட்டிகள் கொடுக்கும்போது இரு கதைகளையும் ஒப்பிட்டுச் சொன்னேன். 

 

கோமாளி படத்திலும் இது மாதிரியான சர்ச்சை வந்தது. கோமாளி பட இயக்குநர் திறமையானவர்தான். படம் பார்த்துவிட்டு நானேகூட பாராட்டினேன். கோமாவில் இருந்து முழித்த ஒருவனுக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மட்டுமே சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதை வைத்து நாம் கதை திருட்டு என்று கூறமுடியாது. கதாநாயகன் எப்படி கோமாவிற்குச் சென்றான், முழித்த பிறகு காதலியைத் தேடிச் செல்வது, அவளுடைய கணவன் டாக்டர் என இருவடைய கதைகளிலும் நிறைய ஒத்துப்போனதால்தான் கதை திருட்டு என்று சொன்னேன். முதலில் கோமாளி பட இயக்குநர் வாதிட்டார். பின், நிறைய ஒற்றுமை இருந்ததால் கதை திருட்டு குற்றச்சாட்டு வைத்தவருக்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கச் சொல்கிறீர்களோ அதைக் கொடுத்துவிடுகிறேன் எனத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒத்துக்கொண்டார்".   

 

 

சார்ந்த செய்திகள்