துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்த வயதில் இயக்குனரானவர் கார்த்திக் நரேன். சொந்த தயாரிப்பில் படத்தை எடுத்து, படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரவே துருவங்கள் பதினாறு சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் என்றொரு படத்தை இயக்கினார். இந்த படம் சில காரணங்களால் ரிலீஸாகமல் உள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங்கின்போதே ‘நாடக மேடை’ என்றொரு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர் அது அறிவிப்புடன் நின்றுபோக, அருண் விஜய் மற்றும் பிரசன்னாவை வைத்து மாஃபியா சாப்டர் 1 என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் கார்த்திக் நரேன் அடுத்து விஜய்யை வைத்து இயக்க இருக்கிறார், அஜித்தை வைத்து இயக்க இருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. தற்போது தனுஷின் 43 வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது இதை கார்த்திக் நரேன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் தனுஷின் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஜிவியுடன் இணைந்து படத்திற்கான கம்போஸிங்கை தொடங்கிவிட்டதாக கார்த்திக் நரேன் பேட்டியளித்துள்ளார். இந்த படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளது படக்குழு.
இந்நிலையில் வலிமை படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பின், பிரசன்னா வலிமை படத்தில் நடிக்க முடியவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தனுஷின் 43வது படத்திலும் பிரசன்னா வில்லனாக நடிக்க கூடும் என்பதை சூசகமாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.