நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நக்கீரன் ஸ்டூடியோவுடனான நேர்காணலில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அந்த நேர்காணலில், சமீபத்திய ஜெய் பீம் திரைப்பட சர்ச்சை குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
"நெகட்டிவ் கதாபாத்திரத்தைச் சொல்லும்போது மிகக்கவனமாக சொல்லவேண்டும். உதாரணத்திற்கு ஒரு போலீஸ்காரரை நெகட்டிவ்வாக காட்டினால் அதே படத்தில் பாசிட்டிவாக வேறொரு போலீஸைக் காட்டவேண்டும். டாக்டர், வாத்தியார் என எந்தக் கதாபாத்திரத்தை காட்டினாலும் இதைப் பின்பற்ற வேண்டும். இது எழுத்தாளரின் கடமை. அதைக் கொள்கையாகவும் அவர்கள் வைத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் படம் நெருடலாக அமைந்துவிடும். உலகத்தில் எல்லா துறையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதை சொல்லத்தவறிவிட்டால் அவர்கள் அனைவரும் இப்படித்தானா என்ற கேள்வி வந்துவிடும்.
மக்களை சினிமாவிற்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக சினிமாக்காரர்கள் எதையாவது செய்வோம். விளம்பரங்களில் பல வகை உள்ளன. சிலர் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காகவும் இதைச் செய்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா அவர் படத்திற்கு பி.எஃப் என்று பெயர் வைத்தார். பி.எஃப் என்றால் ப்ளூ ஃபிலிம் என்று நினைத்து என்னடா இப்படி வச்சிருக்கார் என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்தபோது பி.எஃப் என்றால் பெஸ்ட் ப்ரண்ட் என்று அவர் சொன்னார். சிலர் விளம்பரத்திற்காக இது மாதிரியும் செய்வது உண்டு".