தொடர்ந்து வெற்றிகள், நல்ல பெயர்... தமிழ் சினிமாவின் டார்லிங் மனிதராகத் திகழும் விஜய் சேதுபதியின் 25ஆவது படம் 'சீதக்காதி'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்ததிலிருந்தே பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் பெருகின. வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் அந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதன் பின்னர், விஜய் சேதுபதிக்கு மேக்-அப் நடக்கும் வீடியோ வெளிவந்து பரவியது. இதனால், 'சீதக்காதி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இயக்குனர் பாலாஜி தரணீதரனை சந்தித்துப் பல விஷயங்கள் பேசினோம். அப்போது, விஜய் சேதுபதியின் தோற்றம் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனை நினைவு படுத்துவதைக் கூறினோம்.
"சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் அய்யா பாத்திரத்துக்கு நான் சிலரை ரெஃபரன்ஸாக எடுத்தேன். அதில் கி.ரா சாரும் ஒருவர். முக்கியமாக உடைக்கு அவர் பாணியை பயன்படுத்தினேன். அவர் ஜிப்பா மாதிரியான ஒரு ட்ரெஸ் போடுவார். அந்த ஸ்டைல் இருக்கட்டும், ஆனால் வெள்ளை நிறம் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அதே காட்டன்ல வேற கலர்ஸ் யூஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். தோற்றத்துக்கு நான் இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டது ஜே.கிருஷ்ணமூர்த்தி சாரைத்தான். அந்த வயசுல தோல் எப்படி இருக்கும், தோற்றம் எப்படி இருக்கும் என்பதற்கு அவரைத்தான் இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டேன்" என்று சீதக்காதி அய்யா பாத்திரத்தின் தோற்றம் உருவான கதையைப் பகிர்ந்தார் பாலாஜி தரணீதரன்.
கி.ரா
ஜே.கிருஷ்ணமூர்த்தி
கி.ராஜநாராயணன், சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற, தமிழின் மிக முக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய கோபல்ல கிராமம் உள்ளிட்ட பல நாவல்கள் தென்தமிழக கரிசல்காட்டு வாழ்வியலை உண்மை மாறாமல் உணர வைப்பவை. ஜே.கிருஷ்ணமூர்த்தி, 1895இல் பிறந்த தத்துவவாதியும் எழுத்தாளரும் ஆவார். வாழ்வியல், உளவியல் சார்ந்த அவரது எழுத்துகளும் பேச்சுகளும் மிகவும் பிரபலமானவை. இவர்கள் இருவரும்தான் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி நடித்த 'அய்யா' பாத்திரத்தின் தோற்றத்துக்கு இன்ஸ்பிரேஷனாம். இந்தப் படத்தில் 'அய்யா ஆதிமூலம்’ ஒரு நாடகக் கலைஞர்.
பாலாஜி தரணீதரன் இன்னும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட பேட்டியின் முழு வீடியோ: