டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவனாக திகழ்ந்த ரஃபேல் நடால், கடந்த மாதம் தனது ஓய்வை அறிவித்திருந்தார். அதன்படி அவரது கடைசி தொடரான டேவிஸ் கோப்பை தொடர் இந்த மாத மத்தியில் இருந்து நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு விளையாடிய ரஃபேல் நடால், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதில் நெதர்லாந்து வீரரிடம் அவர் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்தார். கடைசி தொடரில் பட்டம் வெல்லாமலே அவர் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பின்பு கண்கலங்கியபடி பேசிய ரஃபேல் நடால், “நான் ஒரு மரபை விட்டு செல்கிறேன். என்னைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, எனது மனதுக்கு நெருக்கமான ஒன்று” என்றார். பின்பு எமோஷ்னலாக பிரியா விடை கொடுத்தார். இளம் வயதில் பல்வேறு சாதனைகள் படைத்த முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் வீரர்களுக்கு எதிராக 123 முறை வென்று அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வீரராக திகழ்கிறார். 14 முறை பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டம் பெற்ற இவர் 90.7% என்ற வெற்றி சதவிகிதத்துடன் இருக்கிறார்.
டென்னிஸ் வரலாற்றில் அதிக முறை பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் நபர் இவரே. இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த ரஃபேல் நடால், டென்னிஸை விட்டு பிரிவதால் அவருக்கு பலரும் நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தனுஷ், “நன்றி ரஃபா. நீங்கள் இல்லாமல் டென்னிஸ், டென்னிஸ் போல இருக்காது” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.