
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தவர் ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர். இவர், ஒரு இணையத் தொடரிலும் நடித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி படப்பிடிப்பிற்குச் செல்வதாக தன்னுடைய வீட்டில் கூறிவிட்டுக் கிளம்பிய ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இவர், படப்பிடிப்பு தளத்தில் மொபைல் ஃபோனை அணைத்து வைக்கும் பழக்கம் உள்ளவரென்பதால், அவரது பெற்றோரும் தேடாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், அவர் கடந்த 4-ஆம் தேதி அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார். இந்த வீடானது அவரது தந்தை தொழில்ரீதியான காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்தி வந்த வீடாகும். இதனையடுத்து, அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.

ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகருக்கு உளவியல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததாகவும் அதற்கான மருத்துவ சிகிச்சைகளை அவர் எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகரின் இந்தத் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.