உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 8,000 பேராக உயர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு துறைகளான சினிமா துறை, சின்னத்துறைகளில் எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது.
அண்மையில் தமிழக அரசு வெள்ளித்திரையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற அனுமதியும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதியும் வழங்கியது. தற்போது சின்னத்திரைக்கு வழங்கிய அனுமதியில் மொத்தமாக 60 பேர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நாளை (31/05/2020) முதல் துவங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து படப்பிடிப்பின் போது, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அதிகபட்சம் 60 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டரில், ''60 பேர்கொண்ட குழு சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கும் நன்றி. 80 முதல் 100 எண்ணிக்கையிலான குழுவை அனுமதித்தால் சிறுபடங்களும் படப்பிடிப்பை நடத்தி சினிமாவும் படிப்படியாக மீளத்தொடங்கும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.