தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக வெளியாகி திரையரங்கில் வெற்றி நடைபோடுகிறது. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திருவிழா போலக் காட்சி அளிக்கிறது திரையரங்கம்.
முதல் நாள் திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டம், அடாவடி, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறியது. நேற்று சென்னை ரோகிணி திரையரங்கில் துணிவு படக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் பரத்குமார் என்பவர் அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஏறி நடனமாடிய போது கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்று ரசிகர்கள் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பரத்குமார் உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ஆபத்தான கொண்டாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. உயரமான பேனர்கள் மீது ஏறுவது, லாரியின் மேலே ஏறுவது உள்ளிட்ட செயல்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.
நன்கு படித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கும் இளைஞர்கள் இது போன்று செயல்களினால் உயிரிழப்பது, அந்தக் குடும்பத்தை நிலைகுலைய வைக்கிறது. காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துத் தான் வருகிறோம். அதனையும் மீறித் தான் இதுபோன்று நடக்கிறது" எனக் கூறியுள்ளார்.