Published on 24/07/2018 | Edited on 25/07/2018
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பேசுகையில்...
"நான் இந்த நிகழ்விற்கு தாமதமாக வந்ததற்கு காரணம் இந்த படத்தில் லேட்டஸ்ட்டாக இணைக்கப்பட்ட அம்மா பற்றிய ஒரு சிறப்பு பாடல். அந்த பாடலை உருவாக்கி இறுதி வடிவம் கொடுத்து அதனை ஆடியோவை வெளியிடும் நிறுவனத்திடம் சமர்பித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது. அம்மாவின் சிறப்பைப் பற்றி பேசும் இந்த பாடல் ஒரு அருமையான சூழலில் இடம்பெறுகிறது. நான் ஏற்கனவே அப்பாவின் முக்கியத்துவம் பேசும் பாடலை உருவாக்கியிருக்கிறேன். அம்மாவைப் பற்றி பேசும் பாடலை உருவாக்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவது கடினமான பணி. அதிலும் கமர்சியல் வெற்றி பெற்ற சாமி படத்தை போல் ஒரு படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பது சிரமமான காரியம். அதனை ஹரி தலைமையிலான இந்த குழுவினர் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பாட்டு என்பது ஒரு மெட்டு என்பதை விட அது ஒரு பாவனை (எக்ஸ்பிரஸன்) என்பேன். நான் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். விவேகா எழுதிய ‘அதிரூபனே..’ என்ற வார்த்தையில் ஒரு மியூசிகல் லென்த் இருந்தது. அதனால்தான் விவேகா எனக்கு ஸ்பெஷல் என்று நான் அடிக்கடி சொல்வேன். இந்த படத்தில் விக்ரம் அவர்களை ஒரு பாட்டு பாடவைக்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. அவரை எந்த பாடலை பாடவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலை பாடவைக்கலாம் என்று தீர்மானித்து பாடவைத்தோம். இந்த பாடல் அவருடைய ரசிகர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். படத்திலும் கச்சிதமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் பெண் குரலில் யாரை பாடவைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஷிபு சார் தான் கீர்த்தி சுரேசை சிபாரிசு செய்தார். நான் முதலில் சற்று தயங்கினேன். பிறகு அவரை அழைத்து பாட வைத்தோம். அவர் ஸ்ருதியில் பாடியதை கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர் சிறிய வயதில் இசையை முறைப்படி கற்றிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டோம். அவரின் குரலினிமையால் இந்த பாடல் வெற்றிப் பெறும். நடிகை கீர்த்திசுரேசிடமிருந்து மற்றொரு திறமையை கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறோம்.
என்னுடைய ரோல்மாடலே சீயான் விக்ரம்தான். அவருடைய ஒரு நேர்காணல் படித்துதான் நான் என்னை உணர்ந்தேன். அவருடன் இணைந்து ஒருபடம் பணியாற்றவேண்டும் என்று ஆசையிருந்தது. அது கந்தசாமி படத்தில் நிறைவேறியது. இந்த படத்தில் அவரை ஒரு பாடல் பாடவைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடந்தேறியிருக்கிறது. அவருடைய எளிமையான அணுகுமுறை என்னையும் என்னுடன் பணியாற்றுபவர்களையும் கவர்ந்திருக்கிறது. அது தான் அவரின் பலம் மற்றும் அவரது வெற்றிக்கு காரணம்" என்றார்.