உலக புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்ம ஸ்ரீ மேண்டலின் U ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (பிப்ரவரி 28 ) நினைவாக அவரது சிஷியனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்கு பிடித்த கடவுளான அனுமனை போற்றும் அனுமன் ஷாலிஷா பாடலை பியூஷனாக உருவாக்கியுள்ளார். இந்த பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணி பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U ராஜேஷ் ஆகியோரும் இந்த பாடலுக்காக ஒன்றிணைந்து பணிபுரிந்துள்ளனர்.
இந்த பாடலை நேற்று மாலை சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள தி கிரேட் மேண்டலின் ஷோ என்ற நிகழ்ச்சியிலும் நாளை ( மார்ச் 2 ) மாலை சிங்கப்பூரில் எஸ்பிளண்ட் அரங்கில் நடைபெற உள்ள The Mandolin & Beyond என்ற நிகழ்ச்சியிலும் பிரத்யேகமாக நடத்த உள்ளனர். மேலும் இப்பாடல் விரைவில் இணையத்திலும் வெளியாக உள்ளது. முதலாம் ஆண்டு நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கி இருந்த குருவே நமஹ என்ற பாடல் இன்று வரை பிரபல பாடலாகவும் அவரவர் தங்களது குருவிற்காக சமர்ப்பிக்கும் பாடலாக அமைந்தது. அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.