சிறு வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெறும் சம்பவங்களை அடிக்கடி காண நேரிடுகிறது. உணவு முறை பழக்கவழக்கங்களும், தூக்கமின்மை, அதிக மன அழுத்தம் போன்றவற்றால் இது நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்ற 26 வயது இளைஞர் ஹார்ட் அட்டாக்கால் இறந்திருக்கிறார். அவருக்காக நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அருமையான நண்பரை நேற்று இரவு இழந்திருக்கிறேன். மிகவும் திறமையான உதவி இயக்குநர், 26 வயது தான். எந்தவிதமான கெட்ட பழக்கவழக்கங்களும் வைத்திருக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். ஆனால், கடவுள் மிக சீக்கிரமாகவே அவரை எடுத்துச் சென்றுவிட்டார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்தவர் அங்கேயே இறந்திருக்கிறார்.
வாழ்க்கை நிலையற்றது. இறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் தனக்கென எதையும் சேர்த்து வைக்காதவர். எல்லாம் சில நிமிடங்களிலேயே முடிந்திருக்கிறது. இதில் கூடுதலாக வருந்தத்தக்கது என்னவென்றால், அவர் இறப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு எனக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை. அவரது அழைப்பை எடுத்திருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் நிலையில், வெறுப்புணர்வை விட்டொழிப்போம். ஒருவர் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பதில் மகிழ்ச்சியாக இருந்து அவர்களின் சிரிப்புக்கு காரணமாக இருப்போம். உலகின் மிகப்பெரிய எதிரியே மன அழுத்தம் தான். அதைத் தவிர்க்க முயற்சிப்போம். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் எவரிடமாது அதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த வலியுடன் இருக்காதீர்கள். மன அழுத்தத்தை உங்களுக்குள்ளே போட்டு அழுத்தத்தை அதிகப்படுத்தி கொள்ளாதீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.