வடசென்னை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொல்லாதவனில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி, இந்தப் படத்தில் தனது கதாப்பாத்திரமே வேற என்று சொல்லி வடசென்னை படத்தில் தான் என்னவாக நடித்திருக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டார். "இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன் வில்லன் கேரக்டரில் நடிப்பதாகத்தான் பேசி வைத்திருத்தோம். ஆனால், ஒரு நாள் வெற்றி சார் போன் பண்ணி, "எப்பவும் வில்லன் கேரக்டர்தான் பண்ணிட்டு இருக்கீங்க. ஆனா, இந்த கேரக்டர் ஒரு நல்ல நடிகராக வேண்டும், அப்போதுதான் இந்த கேரக்டரை சரியாக நிலை நிறுத்தமுடியும்" என்றார். சரி வேற என்ன செய்வது என்று நானும் ஒப்புக்கொண்டேன். வடசென்னை வாழ்வியலைப் பற்றி சொல்லும் படம்தான் வடசென்னை.
இன்னும் சரியாகச் சொல்லவேண்டும் என்றால் தான் செய்த தவறை எண்ணி தனக்குள்ளே அழுதுகொண்டும் மற்றவரிடம் சிரித்துக்கொண்டும் வாழும் ஒருவனின் கதையாகத்தான் என் கதாபாத்திரம் வடசென்னை படத்தில் இருக்கும்" என்று தன் கதாப்பாத்திரம் பற்றி பேசினார் டேனியல் பாலாஜி. பின், "பொல்லாதவன் படத்தில் எனக்கு ஒரு அண்ணன் கிடைத்தார். இன்றுவரையும் அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுகிறேன். அதுபோல இந்தப் படத்திலும் ஒரு அண்ணன் இருக்கிறார். சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்ன செய்வது ஆண்ட்ரியாவை அண்ணி என்றுதான் கூப்பிடவேண்டும். அப்படி கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பழகி, உண்மையில் 'ஹாய் ஆண்ட்ரியா' என்று கூப்பிடுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். அந்த அளவிற்கு அவர் நடித்திருப்பார்" என்று ஆண்ட்ரியாவை கிண்டல் செய்தார்.