கிரேசி மோகன்... கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துக்குமான பெயரும் புகழும் இயக்குனர்களுக்கே செல்லும் வழக்கமுள்ள தமிழ் சினிமாவில் இயக்குனர்களைத் தாண்டி புகழ் பெறும் வசனகர்த்தாக்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் கிரேசி மோகன். அவரது நகைச்சுவை வசனங்கள் மிகப்பிரபலம். மண்ணை விட்டு மறைந்த கிரேசிமோகன், முன்பு ஒரு விழாவில் நகைச்சுவை குறித்து பேசிய உரையின் ஒரு பகுதி...
"இந்தியா ஒரு மிகப்பெரிய வரலாறு கொண்ட புராதான நாடு. இங்க ரமண மகரிஷி, விவேகானந்தர், பாரதியார் என பல மகான்கள் இருந்திருக்காங்க. பொதுவா, நகைச்சுவைன்னா என்ன? நகைச்சுவை என்பது ஒரு குழந்தையை, ஒரு யானையைப் பார்ப்பது போல... ஒரு குழந்தையை பார்க்கிறோம், அது கருப்பா செகப்பா வெள்ளையா என்பதெல்லாம் கவலையில்லை. எப்படி பார்த்தாலும் அது பச்சை குழந்தை, அதை பார்த்தால் சிரிப்பு வரும். அது போலத்தான் நகைச்சுவையும். அந்த நேரத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
என் கிட்ட வந்து நிறைய பேர் சொல்வாங்க, "உங்க படம் பஞ்சதந்திரம் பார்த்தேன். நல்லா இருந்தது, ஆனா இப்போ எதுவுமே மனசுல நிக்கல. மறந்துபோச்சு"னு. நான் சிரிப்பேன். அதானே வேணும்? Forgetfulness is bliss - மறத்தல் மிகப்பெரிய பேரின்பம். ஒருத்தருக்கு அப்பெண்டிசைட்டிஸ்னு டாக்டர்கிட்ட போனா டாக்டர் உடனே அவரை மடியில் போட்டு வயித்தை கிழிச்சு ஆபரேஷன் பண்றது இல்லை. முதலில் மயக்க மருந்து கொடுக்கிறார். அது போலத்தான் நாங்களும். மக்களுக்கு நகைச்சுவை என்ற மயக்க மருந்து கொடுக்கிறோம். அதன் பிறகு ரமண மகரிஷி, விவேகானந்தர் போன்றவர்கள் ஆபரேஷன் செய்து நோயை குணப்படுத்துகிறார்கள். அதுவரைக்கும் மக்கள் உயிரோட இருக்கணும் இல்லையா? அதுக்கு கொடுக்குற அனஸ்தீசியாதான் நகைச்சுவை."