இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் நாளை (12-07-24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழு வேகமாக செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, மும்பை என சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதற்கிடையில், இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மஞ்சவர்ம தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமினுடைய ஆசானாக இருக்கக்கூடிய ராஜேந்திரன் அளித்த அந்த மனுவில், ‘கடந்த 1996ஆம் ஆண்டில் இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து என்னிடம் ஆலோசித்து படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு உரிய கிரெடிட்டை எனக்குப் படக்குழு கொடுத்தது. ஆனால், இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் படக்குழு நடத்தவில்லை. எனவே, இந்தியன் 2 படத்தை திரையரங்கு, ஓ.டி.டி என எந்தத் தளங்களிலும் வெளியிடக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதி செல்வ மகேஸ்வரி, விரைவில் படம் ரிலீஸ் செய்ய இருப்பதால் விரைவாக பதிலளிக்க வேண்டும் என்று வழக்கை இன்று ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல், இயக்குநர் ஷங்கர், லைகா தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறி ராஜேந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.