லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். விஜய்யின் பிறந்தநாளான கடந்த 22 ஆம் தேதி, இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல் சில விமர்சனத்தையும் எதிர்கொண்டது. பாடல் முழுவதும் விஜய் புகைபிடித்துக் கொண்டே நடனமாடியது மற்றும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருந்ததாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருந்தது. இதனைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. இது பரபரப்பை கிளப்பிய நிலையில், எதிர்ப்புகளின் எதிரொலியாக 'புகைப் பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும்; உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகத்தை இணைத்தது படக்குழு.
இந்நிலையில் இப்பாடலுக்கு எதிராக டி.ஜி.பி அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய்க்கு 2 வயது உள்ள சிறு குழந்தைகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதனால் கூடுதலான தாய்மை உணர்வு எனக்கு இருக்கத்தான் செய்யும். விஜய் சிகரெட் பிடிப்பதை 3 வயது சிறுவன் பார்க்கும் போது தானும் பெரிய ஆளாகி அவரை போல் சிகரெட் பிடிக்க நினைத்தால் யாராவது தடுக்க முடியுமா.
சினிமாவுக்கு தேவைப்பட்டால் அக்டோபர் மாசம் வெளியிட்டிருக்கனும். ஏன் படம் வருவதற்கு முன்னாள் பாட்டை வெளியிட்டாங்க. 53 சதவீதம் பேர் புகைப் பிடிப்பதற்கு நடிகர்கள் தான் காரணம் என ஆய்வு கூறுகிறது. இப்பாடலை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் நான் பதிவிட்டபோது ஆபாசமாகவும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். அவர்களுக்கு விஜய் தான் பணம் கொடுத்து இதுபோன்ற வேலையை பார்க்கிறார். அதனால் நடிகர் விஜய்யை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.