தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இதுபோக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
திரைப்படங்களைத் தாண்டி இசை நிகழ்ச்சியும் நடத்தி வரும் அவர் சமீபத்தில் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குளறுபடிக்குத் தீர்வளிக்கும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் ரசிகர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், கடந்த 2018ல் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ. 29.50 லட்சம் முன்பணம் பெற்று, திருப்பித் தரவில்லை. மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கான முன் தொகையை திருப்பிக் கேட்டபோது, அதனைத் தரவில்லை. அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனதால் அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிய வேண்டும். இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் மீதும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.