'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் சாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையொட்டி படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு மகிழ்ந்தனர். இந்த நிலையில் சாந்தனு இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி ஓராண்டு ஆகிறது. இப்படத்தின் பயணத்தையும் வெற்றியையும் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். எங்களை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.