‘ஹெலோ எக்ஸ்கியூஸ் மி, சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா?’ என்று வடிவேலுவிடம் தவசி படத்தில் வரும் காமெடியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இதன்பின் பல படங்களில் காமெடியனாக நடித்து புகழடைந்தார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். குமுளியில் நடைபெற்ற சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி இன்று காலை அதிகாலை நான்கு மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.
என்னதான் தவசி படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியின் மூலம் மக்களின் கவனத்தை இவர் ஈர்த்திருந்தாலும் அதற்கு முன்பாகவே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்பின் முகவரி கேட்க வரும் கதாபாத்திரம் இவருக்கென்று சினிமாவில் ஒரு முகவரியை கொடுத்துள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்திருக்கிறார். தீபாவளிக்கு ரிலீஸாக இருக்க கைதி படத்தில் கூட நடித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது நாட்டம் அதிகமாக இருந்ததால் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியில் போடப்படும் டிராமாக்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பின் பத்தாம் வகுப்பு பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு 17 வயதில் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். பல இடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு பின்னர் சினிமா கம்பேனிகளிலும், விளம்பர கம்பேனிகளிலும் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். குழந்தை ஏசு என்னும் படத்தில் ஆபிஸ் பாயாக சேர்ந்து அந்த படம் முடிவதற்குள் இவரின் உழைப்பால் புரொடக்ஷன் மேனேஜராக உயர்ந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஒரு பேட்டியில், “கிருஷ்ணமூர்த்தி என்னைவிட்டு போனப்பிறகு எனக்கு நிறைய லாஸ் ஆகிடுச்சு. அந்தளவிற்கு இவரைப்போல வேறு ஒரு மேனேஜர் எனக்கு கிடைக்கவில்லை” என்று பெருமிதமாக கூறினார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்திருக்கிறார். வைகைப்புயல் வடிவேலும் இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கமல்ஹாசனின் தீவிர ரசிகன் இவர். நாவல் ஒன்றை வாங்கினால் முதலில், கடைசி பக்கத்தை படித்து க்ளைமாக்ஸ் என்ன என்பதை தெரிந்துகொண்டுதான் கதையையே படிக்க தொடங்குவார் என்று அவரே தன்னை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தவசி படத்தில் புரொடக்ஷன் மேனேஜராக கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்தபோது வடிவேலுதான் கிருஷ்ணமூர்த்தி முகவரி கேட்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாராம். இவர் நடிக்கவே மாட்டேன் என்று வீட்டிலேயே இருந்திருக்கிறார். பின்னர் வடிவேலுவே கால் செய்து இந்த காட்சியில் நீதான் நடிக்கிற என்றவுடன் வேறு வழியில்லாமல் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த காட்சியில்தான் மக்களை ஈர்த்து காமெடியனாக வலம் வந்து பின்னர், மௌனகுரு, நான் கடவுள். நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக மாறியிருக்கிறார்.