Skip to main content

ஓடிடியில் வெளியாகும் படங்கள்... தீர்மானம் நிறைவேற்றிய டி.ஆர் !

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
t rajendar

 

 

கரோனா அச்சறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்பட வில்லை. அண்மையில்தான் திரைப்பட ஷூட்டிங்கிற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் ஷுட்டிங் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனிடையே சூர்யா தனது சுரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்ததிலிருந்து விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 

இது தொடர்பாக விவாதிக்க நேற்று தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் சந்திப்பு ஜூம் செயலி வழியே நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்களை வெளியிட்டுள்ளனர்.

 

 

"1. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால்தான் ஒரு விநியோகஸ்தரால் அந்தப் படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்தப் படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்தப் படகை ஓட்டுவதற்குத் துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் நமது திரைப்படத் தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது.

 

 

ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிகரமாக ஒரு விநியோகஸ்தர் இருப்பது என்றாலும் சரி, திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு தேவை. திரையுலகம் வாழ, திரையரங்குகள் வாழ, திரைப்பட விநியோகஸ்தர்கள் வாழ, முதலில் பக்க பலமாக, உறுதுணையாக விநியோகஸ்தர்களாகிய நாங்கள் இருக்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும்போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியைத் தோளிலே தூக்கிச் சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

 

 

இன்றைக்கு வந்திருக்கலாம் ஓடிடி தளம். ஆனால், இத்தனை காலமாகப் பல நட்சத்திர நடிகர்களுக்குப் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். ஏற்கெனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்துவிட்டது. பத்தும் பத்தாததற்கு கரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டுக் கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டிக் கிடக்கின்றது.

 

 

ஓடிடி தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா?. தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த ஓடிடி என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க விரும்புகின்றோம்.

 

 

இன்று வேண்டுமானால் கரோனாவின் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டுக்கிடக்கலாம். கடவுள் அருளால், காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும்.

 

 

2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவிகிதம் வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LBT) 8 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்துவதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி 8 சதவிகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

 

 

3. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக விநியோகஸ்தர்களிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்தப் படத்தினைத் திரையரங்குகளில் வெளியிடாமலும், விநியோகஸ்தர்கள் செலுத்திய தொகையைத் திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத்தினை ஓடிடியில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினைத் திரும்பப் பெற்றுச் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்குச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 

 

இந்தச் சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்டத் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார் மற்றும் இதர மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.


 

 

 

 

சார்ந்த செய்திகள்