ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது, அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து வைரலாவது வழக்கம். அந்த வகையில் முன்னதாக கபடி விளையாடியது, நடனம் ஆடியது, ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட ரோஜாவின் செயல்கள் வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து ஏழை குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் மருத்துவச் செலவுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், ‘ஆடுவோம் ஆந்திரா’ என்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குண்டூரில் நடைபெறுகிறது. அதன் தொடக்க விழா இன்று நடந்த நிலையில், அதில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று கலந்து கொண்டார்கள். அப்போது அமைச்சர் ரோஜா கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் செய்தார். அப்போது அவர் விளையாடத் தெரியாமல் தடுமாற அவருக்கு முதல்வர் பேட்டிங் கற்றுக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.