![vikram](http://image.nakkheeran.in/cdn/farfuture/2RIU6KnRozHRD_yRxcSH_2XAfD6Ka2qR2WpCPIJBzjE/1643971674/sites/default/files/inline-images/139_7.jpg)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம்,சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், மகான் படம் குறித்து நடிகர் விக்ரம் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், "இந்தப் படத்தில் எனக்கு 20 வருட பயணம் இருக்கும். படம் பார்க்கிறவர்களுக்கு அந்த 20 வருடம் வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்று நினைத்தேன். மிகவும் கஷ்டப்பட்டு அதைச் செய்தேன். உடலளவில் அது எளிதாக இருந்தது. மனதளவில் அந்த மாற்றத்தைக் கொண்டுவருவது மிகவும் சிரமமாக இருந்தது. படத்தை எடிட் செய்த பிறகு அந்த மாற்றம் கண்கூடாகத் தெரிவதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார்.
ஆதித்ய வர்மா படம் பண்ணும்போது நான் த்ருவ் கூடவே இருந்தேன். முதல் படம் தவறிவிட்டது. அதனால் அடுத்த படம் சரியாக வரவேண்டும் என்று கவனமாக இருந்தேன். அந்த செட்டிலேயே நான் ஏதாவது சொன்னால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுதான் கூறுவான். இந்தப் படத்தில் நீ உன் வழியிலேயே போ என்று கூறிவிட்டேன். சைக்கிளை பிடித்துக்கொண்டே வந்தேன். இப்போது விட்டு விட்டேன். விழுந்தால் மீண்டும் எழுந்திரித்து ஓடு என்று கூறிவிட்டேன். அவனால் அதைச் செய்ய முடியும். படம் பார்க்கும்போது அவனுடைய நடிப்பு உங்களுக்கு பிடிக்கும்.
இந்தப் படத்தில் சிம்ரன் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். நான் சேது படத்திற்கு பிறகு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், ஆஸ்கார் ரவிச்சந்திரன் எனப் பெரிய பெரிய ஆட்களுடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்தப் படங்களில் ரம்பா, ரோஜா, சிம்ரன், ஜோதிகா ஆகிய ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்பட்டேன். நான் அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து வளர்ந்து வரும்போது அவர்கள் ரிட்டையர்டாக ஆரம்பித்துவிட்டனர். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சி.
கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படம் இயக்குவதற்கு முன்னரே நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ண முடிவெடுத்தோம். பின், பேட்ட படம் இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் அந்தப் படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றார். நான் கோப்ரா படம் பண்ணிக்கொண்டு இருந்தபோது இந்தக் கதையை கார்த்தி என்னிடம் கூறினார். கதை கேட்டபோது என்னுடைய கதாபாத்திரத்தைவிட த்ருவ் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.கார்த்திக் சுப்பராஜ் மிகச்சிறந்த இயக்குநர். அவருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று நான் ரொம்பவும் விரும்பினேன்.
ஓடிடியில் வெளியிடணுமா என்று முதலில் யோசனையாக இருந்தது. ஆனால், தற்போது உள்ள சூழலில் அதுதான் பாதுகாப்பாக இருக்கிறது. அதனுடைய ரீச்சும் பெரிய அளவில் இருக்கிறது. ஓடிடி சினிமாவை காலி செய்துவிடும் என்றார்கள். ஆனால், அப்படி இல்லை. திரையரங்கிலும் வெளியிடலாம், ஓடிடியிலும் வெளியிடலாம் என்பது நல்ல விஷயம்தான். அதேநேரத்தில் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் என்பது தனி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு என்னுடைய படம் வெளியாவதால் மிகுந்த உற்சாகமாக உள்ளேன்" எனக் கூறினார்.