மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வெற்றிபெற்றது. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் தற்போது தெலுங்கில் எடுக்கப்படும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் ராம்சரண், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம், பூஜையுடன் சில மாதங்களுக்கு முன் ஆரம்பமானது. சிரஞ்சீவியின் 153வது படமாக உருவாகும் இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் சிலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, இப்படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக இதுநாள்வரை படப்பிடிப்பு ஆரம்பமாகமலேயே இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர் மோகன் ராஜா படப்பிடிப்பு தளத்தில் மானிட்டர் முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை முடித்த கையோடு ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.