தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அக்கினேனி நாகேஸ்வர ராவ். ஏழு தசாப்தங்களாக சினிமாவில் பணியாற்றிய இவர், நாட்டின் உயரிய விருதுகளான தாதாசாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வாங்கியுள்ளார். இவரது சினிமா பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது குடும்பத்தினர் ஏ.என்.ஆர். தேசிய விருது என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு பிரபலத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகின்றனர்.
2005ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தி நடிகர் தேவ் ஆனந்த், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி, தெலுங்கு நடிகை அஞ்சலி தேவி, இந்தி நடிகை வைஜெயந்தி மாலா, பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர், இயக்குநர் பாலச்சந்தர், நடிகை ஹேமா மாலினி, இயக்குநர் ஷியாம் பெனகல், நடிகர் அமிதாப் பச்சன், இயக்குநர் ராஜமௌலி, நடிகை ஸ்ரீ தேவி, இந்தி நடிகை ரேகா ஆகியோர் வாங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான ஏ.என்.ஆர். தேசிய விருது தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் நிகழ்வில் கலந்து கொண்டு சிரஞ்சீவிக்கு விருது வழங்கினார். அப்போது சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இவர்களுடன் அக்கினேனி நாகேஸ்வர ராவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் மேடையில் உடனிருந்தார். அதே போல் அமிதாப் பச்சனும் அக்கினேனி நாகேஸ்வர ராவின் மனைவி காலை தொட்டு ஆசீர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.